Wednesday, June 30, 2021

ஸ்ரீரசாவின் மின்னணு ஓவியம் 1
 

 


 

 



 

 

 

 

 

 

 

 

வேடம்
O

ஸ்ரீரசா

O

நான் நேற்றொரு கடவுளைப் பார்த்தேன்
அவன் சாத்தானின் வேடமிட்டிருந்தான்

அவனோடு கூட நடந்தான் சாத்தான்
அவன் கடவுள் வேடமிட்டிருந்தான்

சாத்தான் கடவுளும்
கடவுள் சாத்தானும்
மனிதர்களோடு வாழ்க்கை விளையாட்டு
விளையாடப் போய்க் கொண்டிருந்தனர்

மனிதர்கள் விளையாடக்
கடவுள் நரகம் போன்றெதொரு
சொர்க்கத்தைப் படைத்திருந்தான்
சாத்தானோ சொர்க்கம் போன்றதொரு
நரகத்தைப் படைத்திருந்தான்

தேவருலகின் கடைவீதிகளில் இருந்து
மூட்டை மூட்டையாய்ப் பயங்களை வாங்கித்
தங்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும்
சாத்தானும் கடவுளும் படைத்திருந்தனர்

பயங்களோ மரணத்தின் வயல்வெளிகளில்
விளைந்து குவிந்திருந்தன

மரண விளையாட்டில்
மனிதர்கள் மூழ்கிக் கிடந்தனர்

கருப் பொழுதில் இருந்தே அவர்கள்
மரணப் புள்ளியை நோக்கிய
பயணத்தின் அடிகளை
எடுத்து வைக்கத் துவங்கினர்

நடக்கும் பொழுதுகளில் அவர்கள்
காலிடுக்கிலிருந்து நழுவிய
பிறப்பு மரணத்தை நோக்கிய
எதிர்க்கதைகளை எழுதியது

மற்றுமொரு பயணக் கதையை
மரணம் எழுதியது

கூட்டலும் கழித்தலும்
பெருக்கி வகுத்து
எஞ்சிக்கிடந்தது
வாழ்வெனும் பெருங்கணக்கு

கணக்குச் சிலேட்டின்
இந்தப்புறம் சாத்தானின் பெருக்கலும்
அந்தப்புறம் கடவுளின் வகுத்தலும்
எழுதிக் கொண்டே இருந்தார்கள்
கடவுள் வேடமிட்ட
சாத்தானுக்குக் கட்டிய கோவிலிலும்
சாத்தான் வேடமிட்ட
கடவுளுக்குக் கட்டிய கோவிலிலும்

மனிதர்கள் மட்டுமே
மரண பயத்தோடும்
பய மரணத்தோடும்
வணங்கித் திரிந்தார்கள்

வணங்கினாலும்
வணங்காவிட்டாலும்
மரணம் என்பது
இயற்கையின் நிகழ்தகவென
மனிதர் எப்போதும்
அறிந்தாரில்லை

அறிந்த மனிதரைக்
கொலை செய்ய
சாத்தானும் கடவுளும்
ஒன்றாகக் களமிறங்கினார்கள்

இப்போது
கடவுள் வேடமிடச் சாத்தானுக்கும்
சாத்தான் வேடமிடக் கடவுளுக்கும்
தேவையில்லாமல் போனது.

O

ஸ்ரீரசாவின் மின்னணு ஓவியம் 1